சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் பா.ஜனதா மும்முரம்
சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் பா.ஜனதா மும்முரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு:
சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் பா.ஜனதா மும்முரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 124 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. அதில் காங்கிரசின் முக்கிய தலைவர்களாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார், கே.எச்.முனியப்பா உள்ளிட்டோருக்கும் டிக்கெட் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் 93 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது.
ஆனால் ஆளும் பா.ஜனதா இதுவரையில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்து இருக்கிறார்.
வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணியில் பா.ஜனதா கட்சி மும்முரம் காட்ட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி. தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதாவது கட்சியின் ஒவ்வொரு மாவட்ட தலைவரும், தங்களின் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும், அப்போது 2 முதல் 3 வேட்பாளர்களின் பெயர்களை தேர்வு செய்து கட்சியின் மாநில தலைவருக்கு அனுப்ப வேண்டும், அவர் அந்த பட்டியலில் இருந்து இறுதி பட்டியலை தயாரித்து கட்சி மேலிடத்துக்கு அனுப்புவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
130 பேர்...
இதுஒருபுறம் இருக்க ஏற்கனவே 130 பேரின் பெயர்களை கட்சி மேலிடம் இறுதி செய்துவிட்டதாகவும், அவர்கள் தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர்கள் எனவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அவர்களின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்துக்கு வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், கட்சி தலைவர்கள் இதுபற்றி பேசியதாகவும், அப்போது அவர் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து மேலிடத்துக்கு அனுப்பும்படி கூறி உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பா.ஜனதா மேலிடம் முடிவு
மேலும் இந்த முறை 20 சதவீத புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டு இருக்கிறதாம். அதுபோல் பெங்களூரு மாநகரம் உள்பட மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் பா.ஜனதா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறதாம். அதனால் அங்கு வலுவான, மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளரை அடையாளம் கண்டு களம் நிறுத்த பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.