"தமிழ் என்னுடைய தாய்மொழியாக கிடைக்காதது, எனக்கு வருத்தம் தான்"- பிரதமர் மோடி


தமிழ் என்னுடைய தாய்மொழியாக கிடைக்காதது, எனக்கு வருத்தம் தான்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 29 March 2024 5:51 PM IST (Updated: 29 March 2024 6:49 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.

புதுடெல்லி,

நமோ செயலி மூலம் "எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது,

தமிழகம் வரும்போதெல்லாம் வணக்கத்துடன் தான் பேச்சை தொடங்கினாலும் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு..ஏனெனில் ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியை வணக்கம் சொல்லும் போது தொழிலாளிகளுக்குள் சொந்தம் என்ற உணர்வு ஏற்படும்.

என் வாழ்க்கையின் பெரும் பகுதியை, உங்களைப் போல ஒரு சாதாரண தொண்டனாகவே கழித்தேன்.உங்களின் கடினமான உழைப்பு கட்சியை ஆழமான வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும். 'எனது பூத், வலிமையான பூத்' என்ற முழக்கத்திற்கு, உங்களின் கடின உழைப்பே காரணம்.நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காக, நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் சென்ற போது மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பை பார்க்க முடிந்தது, இப்படிப்பட்ட தொண்டர்களை பெற்றதை பெருமையாக உணர்ந்தேன்.தொண்டர்களின் கடின உழைப்பால் பா.ஜனதா வளர்ந்து வருகிறது.

எனக்கு தமிழ் தாய்மொழியாக கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது; தமிழில் என்னால் பேச முடியவில்லை என்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழின் பெருமைகளை உரக்கச் சொல்ல வேண்டும், அதற்காக இந்த அரசு பாடுபடும். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு, ஊழல் நிலவுவது கவலை அளிக்கிறது. மக்களுக்கு புதுப்புது பிரச்சினைகளை உருவாக்குவதுதான் தி.மு.க. அரசின் பணியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story