புதுச்சேரியில் வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் பாஜக பிரமுகர் கொலை

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் பாஜக பிரமுகர் கொல்லப்பட்டார்.
வில்லியனூர்,
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கணுவாபெட்டை வன்னியர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இளம் வயது முதல் அரசியலில் ஈடுபட்டு வந்த செந்தில்குமார் ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பொதுச் செயலாளர் மற்றும் மாநில செயலாளர் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் இவரது தலைவரான நமச்சிவாயம் பாஜகவில் இணைந்ததை ஒட்டி இவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்து நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான இவர் மங்கலம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று விழுப்புரம் சாலையில் பேக்கரி கடை ஒன்றில் டீ குடித்துக்கொண்டு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஒன்பது பேர் கொண்ட மர்ம நபர்கள் செந்தில்குமார் மீது வெடிகுண்டு வீசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்மீது கத்து குத்து தாக்குதலும் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் 4 தனி படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பேக்கரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கண்காணித்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.






