பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு: பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 6 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை


பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு: பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 6 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 27 Jun 2023 6:46 PM GMT)

பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக மங்களூரு உள்பட 6 இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு.

பெங்களூரு:-

பிரவீன் நெட்டார் கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரேவை அடுத்த நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகரான இவர் பெல்லாரேவில் உள்ள சுள்ளியா சாலையில் கோழிக்கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு (2022) ஜூலை 26-ந் தேதி இரவு கோழிக்கடையில் இருந்து வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், பிரவீன் நெட்டாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு சென்றனர்.

இந்த கொலை மாநில முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் வன்முறை ஏற்படும் சூழ்நிலை நிலவியது. மேலும் பா.ஜனதா பிரமுகர் என்பதால், கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

6 பேர் கைது

இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் முதற்கட்டமாக 2022-ம் ஆண்டு ஜூலை 28-ந் தேதி சாகீர் (29), சபீக் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களை தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந் தேதி சதாம் (32), அபீத் (22), ஹரிஷ் (42) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் இவர் கொடுத்த தகவலை வைத்து நவ்பால் (28) என்பவர் கைது செய்யப்பட்டார். இதுவரை மொத்தம் 6 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, பாம்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பை சேர்ந்த சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

33 இடங்களில் சோதனை

இதையடுத்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், பிரவீன் நெட்டார் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இது குறித்து விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள், முதற்கட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூரு, மங்களூரு, குடகு ஆகிய 3 மாவட்டங்களில் சோதனை நடத்தினர். 33 இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு எலெக்ட்ரானிக் பொருட்கள், மற்றும் சில ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்தநிலையில் மேலும் சில பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்களுக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக குடகு, தட்சிண கன்னடா மாவட்டங்களில் உள்ள பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த சிலர் பிரவீன் நெட்டார் கொலைக்கு உதவியதாக கூறப்பட்டது.

6 பேரின் வீடுகளில்

இதையடுத்து அவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்திருந்தனர். அதன்படி நேற்று தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு, பெல்தங்கடி, சுள்ளியா மற்றும் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை உள்பட 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதாவது மங்களூரு பெல்தங்கடியை சேர்ந்த கார் டிரைவர் நவுசத் மற்றும் பயந்தார் பகுதியை முஸ்தப்பா, பெல்லாரேவை சேர்ந்த அபுபக்கர் சித்திக், உமர் பரூக், மசூத் அக்னாதி ஆகிய 5 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவர்கள் 5 பேரும் வீடுகளில் இல்லை என்று கூறப்படுகிறது.

குடும்பத்தினரிடம் விசாரணை

இருப்பினும் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தும், எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சில ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் எந்த தகவலும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

இதேபோல குடகு மாவட்டம் சோமாவர்பேட்டை பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த ஒருவரின் வீடு, அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த நபர் அங்கு இல்லை. இதையடுத்து அவர்களிடம் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஒரே நேரத்தில் 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story