பிரதமர் மோடி பிறந்த நாளில் தூய்மை பணியில் பா.ஜ.க. எம்.பி.க்கள்; ஜே.பி. நட்டா அறிவிப்பு


பிரதமர் மோடி பிறந்த நாளில் தூய்மை பணியில் பா.ஜ.க. எம்.பி.க்கள்; ஜே.பி. நட்டா அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2023 10:26 PM GMT (Updated: 31 Aug 2023 1:10 AM GMT)

நாடு முழுவதும், பிரதமர் மோடியின் 73-வது பிறந்த தினத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர் என ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா காணொலி காட்சி வழியே அக்கட்சியின் எம்.பி.க்கள் உடனான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, வருகிற செப்டம்பர் 17-ந்தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சேவா பக்வாரா (மாதத்திற்கு இரு முறை சேவை) என்ற நிகழ்ச்சி தொடங்கி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சி, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி வரை தொடரும்.

இதனை நாடு முழுவதும் கட்சி எம்.பி.க்கள் நடத்த வேண்டும் என கூறியுள்ளார். இதன்படி, அவர்கள் தங்களுடைய பகுதிகளில் ரத்த தான முகாம்கள் மற்றும் தூய்மை பணிக்கான பிரசாரம் உள்ளிட்ட மக்கள் சேவையை செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கார்டுகள் இல்லாத தகுதி வாய்ந்த நபர்கள் அதனை பெறவும் எம்.பி.க்கள் உதவ வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

மேரி மதி மேரா தேஷ் என்ற பிரசாரத்தின் கீழ் கிராமங்களுக்கு சென்று மக்களுடன் உரையாட வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டும் பிரதமர் மோடியின் பிறந்த நாளில் இதுபோன்ற சேவை நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது.


Next Story