மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு பா.ஜனதா கூட்டணி கட்சி எதிர்ப்பு


மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு பா.ஜனதா கூட்டணி கட்சி எதிர்ப்பு
x
தினத்தந்தி 10 July 2023 5:06 AM GMT (Updated: 10 July 2023 9:14 AM GMT)

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இடாநகர்,

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்த வரிசையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் ஒன்றான தேசிய மக்களின் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த கட்சியின் அருணாசல பிரதேச கிளையின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து மாநில செயல் தலைவர் லிகா சாயா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வளர்ச்சி திட்டங்களில் தேசிய மக்களின் கட்சி, பா.ஜனதாவுடன் கூட்டணியாக செயல்பாட்டாலும், எங்களின் சொந்த சித்தாந்தத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்' என தெரிவித்தார்.

கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பக்னா பாகே கூறும்போது, 'அருணாசல பிரதேசத்துக்கு என தனித்துவமான சட்டங்கள் உள்ளன. சில மாற்றங்களுடன் இந்த சட்டங்களையே தொடர வேண்டும் என கட்சி ஒருமனதாக முடிவு எடுத்துள்ளது' என்று கூறினார்.


Next Story