பா.ஜ.க. பதில் கூற முடியாத கேள்வியை கேட்டதற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம்: பிரியங்கா காந்தி பேச்சு


பா.ஜ.க. பதில் கூற முடியாத கேள்வியை கேட்டதற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம்:  பிரியங்கா காந்தி பேச்சு
x

பா.ஜ.க. பதில் கூற முடியாத கேள்வியை கேட்டதற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என பிரியங்கா காந்தி வயநாட்டில் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக,அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை மக்களவை செயலகம் அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. எனினும், கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்து உள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. அதனை எதிர்கொள்ளவும் அவர் தயாராகி வருகிறார்.

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நாடு முழுவதும் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் கூட இந்த விசயம் எதிரொலித்தது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நடவடிக்கைகள் முடங்கின.

இந்த சூழலில், கேரளாவின் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு பின்னர், முதன்முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது சகோதரி மற்றும் கட்சியின் உத்தர பிரதேச பொது செயலாளரான பிரியங்கா காந்தியும் சென்றார்.

இந்த பயணத்தின்போது, பொது கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசினார். இதேபோன்று பிரியங்கா காந்தி கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசும்போது, பா.ஜ.க. பதில் கூற முடியாத கேள்வி ஒன்றை கேட்டதற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

ஒட்டு மொத்த அரசும் கவுதம் அதானியை பாதுகாக்க முயற்சித்து வருகிறது. பிரதமரும் அதானியை பாதுகாத்து வருகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் உடையணியும் முறையை மாற்றி கொண்டிருக்கிறார்.

ஆனால், பொதுமக்களின் வாழ்க்கை முறையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அவர்கள் வேலை கிடைக்க போராடி வருகின்றனர் என்று பேசியுள்ளார்.


Next Story