இந்தியா கூட்டணி சுயநல கூட்டணி.. பாஜக கடும் விமர்சனம்
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான முயற்சியானது மியூசிக்கல் சேர் விளையாட்டு போன்றது என சம்பித் பத்ரா விமர்சனம் செய்தார்.
மராட்டியத்தின் மும்பை நகரில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற கூடிய நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும், ஆட்சியை பிடிக்கவும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த சந்திப்பை நடத்துகின்றன. இதற்கு முன் 2 முறை ஆலோசனை கூட்டம் நடந்துள்ள சூழலில், இன்று தொடங்கும் 3-வது கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. இதனால் இக்கூட்டம் எதிர்க்கட்சி தலைவர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியையும், கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும் பாஜக கடுமையாக சாடி உள்ளது. பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா இதுபற்றி கூறியதாவது:-
இந்தியா கூட்டணியானது சுயநலக் கூட்டணி. கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் குடும்பங்களின் நலன்களை மேம்படுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான முயற்சியானது மியூசிக்கல் சேர் விளையாட்டு போன்றது. இந்த கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இதுபோன்று முயற்சி செய்கின்றன. பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில் அவர்களுக்குள் பரஸ்பர மோதல் மற்றும் ஒற்றுமை இல்லாவிட்டாலும் முயற்சி செய்கின்றன.
இந்தியா கூட்டணியில் விவாதிக்கப்படும் குறைந்தபட்ச பொது செயல்திட்டமானது, உண்மையில், ''ஊழலின் அதிகபட்ச லாபம்" என்பதாகவே இருக்கும். ஏனெனில் இந்தக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் செய்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.