புல்வாமா தாக்குதல், பாலகோட் வான் தாக்குதலை பயன்படுத்தி தேர்தலில் பாஜக வெற்றி - திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி
புல்வாமா தாக்குதல், பாலகோட் வான் தாக்குதலை தேர்தலில் வெற்றிபெற பாஜக பயன்படுத்திக்கொண்டது என்று திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி கூறினார்.
அகர்தலா,
ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் வீரமரணமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, புல்வாமா தாக்குதல் நடைபெற்றபோது ஜம்மு-காஷ்மீர் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் தோல்வியே புல்வாமா தாக்குதலுக்கு காரணம் என்று கூறினார். சத்யபால் மாலிக்கின் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல், பாலகோட் வான் தாக்குதலை தேர்தலில் வெற்றிபெற பாஜக பயன்படுத்திக்கொண்டது என்று கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல்-மந்திரியுமான மானிக் சாகர் கூறினார்.
இது தொடர்பாக மானிக் சாகர் கூறுகையில், புல்வாமா தாக்குதல், பாலகோட் வான் தாக்குதல் சூழ்நிலையை பயன்படுத்தி 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. இந்த சம்பவம் நடைபெற்றபோது ஜம்மு-காஷ்மீர் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் தற்போது இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்' என்றார்.
முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் இது குறித்து பேட்டி அளித்த பின் அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பும் என எதிர்பார்த்தேன். அது சரியாக நடந்தது. காப்பீடு முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய விசாரணை அமைப்பு சத்யபால் மாலிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது' என்றார்.