சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க பா.ஜனதா விரும்புகிறது - சித்தராமையா


சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க பா.ஜனதா விரும்புகிறது - சித்தராமையா
x

நாட்டில் சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க பா.ஜனதா விரும்புகிறது என்று சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

யாரும் நடத்தியது இல்லை

பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட சித்தராமையா பேசியதாவது:-

ராகுல் காந்தியின் பாதயாத்திரை குண்டலுப்பேட்டையில் தொடங்குகிறது. கர்நாடகத்தில் 8 மாவட்டங்கள் வழியாக இந்த பாதயாத்திரை 511 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. ஒட்டுமொத்தமாக நாட்டில் 3 ஆயிரத்து 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாதயாத்திரை நடக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவ்வளவு தூரம் கொண்ட பாதயாத்திரையை யாரும் நடத்தியது இல்லை.

பயத்தில் வாழும் நிலை

நாட்டில் மோடி பிரதமரான பிறகு மத வெறுப்பு அரசியல் தொடங்கியுள்ளது. பெண்கள், விவசாயிகள், சிறுபான்மை மக்கள் பயத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம், அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி பா.ஜனதா. பா.ஜனதா கட்சியினர் ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே சினனத்தில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சி நடந்தது. ஆனால் அப்போது இருந்த ஜனாதிபதி அதை அனுமதிக்கவில்லை. நாட்டில் அமைதி, நல்லிணக்கம் இருக்க கூடாது, சாதி, மதம் அடிப்படையில் மக்களை பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. மோடி பிரதமரான பிறகு இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

ஊழல் தாண்டவமாடுகிறது

இதை சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாம் தடுக்க வேண்டும். இது நமது கடமை. கர்நாடகத்தில் ஊழல் தாண்டவமாடுகிறது. இது 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

ராகுல் காந்தியின் யாத்திரை கர்நாடகத்தில் வெற்றி பெற வேண்டும். இந்த யாத்திரையை பா.ஜனதாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் காங்கிரஸ் போஸ்டர்களை கிழிக்கிறார்கள். இது தொடர்ந்தால் பா.ஜனதா தலைவர்கள் வெளியில் நடமாட விடமாட்டோம். போலீசார் பா.ஜனதாவினர் கூறியபடி செயல்படுகிறார்கள். இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைய உள்ளது. காங்கிரசுக்கு எதிராக செயல்படும் போலீசாருக்கு நாங்கள் தக்க பாடம் புகட்டுவோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story