யார் விலகி சென்றாலும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படாது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


யார் விலகி சென்றாலும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படாது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

யார் விலகி சென்றாலும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

லிங்காயத் சமூகம்

கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 2009-ம் ஆண்டு லிங்காயத் சமூகத்தை இட ஒதுக்கீடு பட்டியலில் 2ஏ-வில் சேர்ப்பதை அக்கட்சி எதிர்த்தது. 2016-ம் ஆண்டு அதை காங்கிரஸ் ஆட்சியில் நிராகரித்தனர். நாங்கள் லிங்காயத் சமூகத்திற்கு 2டி அந்தஸ்து வழங்கி இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம்.

இதனை எதிா்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். இதை காங்கிரஸ் பின்னால் இருந்து தூண்டி விட்டுள்ளது. லிங்காயத் மக்களின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுக்கிறது. லிங்காயத் சமூகத்தை உடைக்க சித்தராமையா ஆட்சியில் மேற்கொண்ட முயற்சிகளை யாரும் மறக்க முடியாது. கிருஷ்ணா நீர் பங்கீட்டு விஷயத்தில் காங்கிரஸ் என்ன செய்தது?.

முதல்-மந்திரி ஆக்கவில்லை

ஒரு ஏக்கர் நிலத்திற்கு கூட அக்கட்சியால் தண்ணீர் வசதி கொடுக்க முடியவில்லை. சமூக, பொருளாதார, அரசியல், நிர்வாக ரீதியாக ஆட்சியில் உள்ளவா்கள் யார், மந்திரிசபையில் எத்தனை மந்திரிகள் உள்ளனர் என்பதை லிங்காயத் மக்கள் கவனிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் வீரேந்திர பட்டீலை காங்கிரசார் முதல்-மந்திரி ஆக்கினர். அதன் பிறகு அந்த சமூகத்தை சேர்ந்த யாரையும் காங்கிரஸ் முதல்-மந்திரி ஆக்கவில்லை.

லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எஸ்.ஆர்.பட்டீலை மரியாதை குறைவாக காங்கிரசார் நடத்தியுள்ளனர். அவருக்கு மேல்-சபை தலைவர் பதவி கிடைப்பதை தடுத்தனர். வட கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளை பா.ஜனதா செய்துள்ளது. பா.ஜனதாவில் இருந்து யார் சென்றாலும், சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கர்நாடகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

கட்டுப்பாட்டில் இல்லை

கர்நாடகத்தில் பா.ஜனதா ஒருவரின் கட்டுப்பாட்டில் இல்லை. எங்களுடையது தேசிய கட்சி. பா.ஜனதாவின் உச்சபட்ச தலைவர் பிரதமர் மோடி. நடிகர் சுதீப்பின் பிரசார திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வகுக்கப்பட்ட பிறகு அவர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வார். சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக சுனாமி அலை வீசி வருகிறது. அதனால் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.

காங்கிரசார் தேர்தல் வாக்குறுதிகளுக்கு உத்தரவாத அட்டையை வழங்குவதாக சொல்கிறார்கள். அது உத்தரவாத அட்டை கிடையாது. அது 'விசிட்டிங் கார்டு'. நாங்கள் தலித், பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். மேலும் தலித் உட்பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story
  • chat