சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும் ஜன் கீ பாத் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு
தேர்தல் கருத்து கணிப்புகள்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதாவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே பல்வேறு நிறுவனங்கள் வாக்காளர்களிடம் கருத்துகளை கேட்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி ஜன் கீ பாத் நிறுவனமும் கடந்த மாதம் (மார்ச்) 15-ந் தேதியில் இருந்து கடந்த 11-ந் தேதி வரை மக்களிடம் கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்பது குறித்து கருத்து கேட்டு இருந்தனர். அதில் கிடைத்த விவரங்களை வைத்து கருத்து கணிப்பு முடிவுகளை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
தனிப்பெரும்பான்மை கிடைக்காது
அதன்படி, கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 98 முதல் 109 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இதன்மூலம் தற்போது இருக்கும் 120 எம்.எல்.ஏ.க்களின் பலத்தில் 11 முதல் 22 எம்.எல்.ஏ.க்களை இழக்க நேரிம் என்றும் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி 89 முதல் 97 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், தற்போது இருக்கும் 69 எம்.எல்.ஏ.க்களின் பலம் 20 முதல் 28 வரை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசுக்கு அதிக வாக்கு
ஜனதாதளம் (எஸ்) கட்சி 25 முதல் 29 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பா.ஜனதாவுக்கு 37 முதல் 39 சதவீதமும், காங்கிரஸ் கட்சிக்குகு 38 முதல் 40 சதவீதமும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 16 முதல் 18 சதவீத வாக்குகளும் கிடைக்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பா.ஜனதாவை விட காங்கிரசின் வாக்குகள் சதவீதம் அதிகமாக இருந்தாலும், அதிக தொகுதிகளில் பா.ஜனதா தான் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.