மம்தா மீதான கருத்துக்கு திலீப் கோஷ் மன்னிப்பு கோரினார்


மம்தா மீதான கருத்துக்கு திலீப் கோஷ் மன்னிப்பு கோரினார்
x
தினத்தந்தி 27 March 2024 4:00 PM IST (Updated: 27 March 2024 5:52 PM IST)
t-max-icont-min-icon

மம்தா பானர்ஜி குறித்த அவதூறு கருத்துகள் தொடர்பாக திலீப் கோஷிடம் விளக்கம் கோரி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரில் பா.ஜ.க. எம்.பி. திலீப் கோஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மம்தா பானர்ஜி எங்கு சென்றாலும் அவர் தன்னை அந்த மாநிலத்தின் மகள் என்று அழைக்கிறார். அவர் தனது சொந்த தந்தையை அடையாளம் காண வேண்டும். முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கோவாவுக்கு செல்லும் போது, அவர் தன்னை கோவாவின் மகள் என்று அழைக்கிறார். அவர் திரிபுராவுக்கு செல்லும் போது, திரிபுராவின் மகள் என்று கூறுகிறார். அவர் முதலில் தன் தந்தையை அடையாளம் காண வேண்டும்" என்றார்.

மம்தா பானர்ஜி குறித்து திலீப் கோஷ் பேசியது மேற்கு வங்காளத்தில் கடும் சர்ச்சையானது. இந்த கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் திலீப் கோஷ் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ எந்தவொரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்குதல் மற்றும் அறநெறியை புண்படுத்தும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ அல்லது அறிக்கைகளையும் வெளியிட கூடாது. இந்த விதிகளை மீறிய திலீப் கோஷ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குறித்த அவதூறு கருத்துகள் தொடர்பாக திலீப் கோஷிடம் விளக்கம் கோரி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், திலீப் கோஷின் கருத்து அநாகரிகமானது மற்றும் சபை நாகரிகத்துக்கு ஏற்றதல்ல. கட்சியின் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளதோடு, இதுபோன்ற கருத்துகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து திலீப் கோஷ் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கருத்துக்கு பா.ஜ.க. எம்.பி. திலீப் கோஷ் இன்று மன்னிப்பு கோரினார். பா.ஜ.க. நோட்டீஸ் அனுப்பிய சில மணி நேரத்திற்கு பிறகு கோஷ் மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story