எதிர்க்கட்சிகளை அழிப்பதே பா.ஜனதாவின் நோக்கம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அழிப்பதே பா.ஜனதாவின் நோக்கம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி துணை முதல்-மந்திரி பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகாதார மந்திரி பதவி வகித்து பின்னர் இலாகா இல்லாத மந்திரியாக இருந்து வந்த வகித்த சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டுவதே பாஜனதா தலைமையிலான மத்திய அரசின் எண்ணம் என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்பியும், அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான ராகவ் சதா, "மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், சிபிஐ வேண்டுமென்ற வழக்குரைஞர் நீதிமன்றத்தில் ஆஜரவாதைத் தடுத்தது. அதன் விளைவாக வழக்கு அடுத்த தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், அமலாக்கத் துறை சிசோடியாவை மீண்டும் கைது செய்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையே மீண்டும் கேட்கத் தயாரானது.
இந்த செயல் சட்டவிதிமுறைகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதை வெளிக்காட்டுகிறது. வழக்கு நடைமுறையை விசாரணை அமைப்புகள் மீறி வருகின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிபிஐ பதிவு செய்த வழக்குகளில் 95 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதானவை. அவற்றுள், 30 வழக்குகள் திரிணமூல் காங்கிரஸ் மீதும், 25 வழக்குகள் காங்கிரஸ் தலைவர்கள் மீதும், 4 வழக்குகள் ஆம் ஆத்மி தலைவர்கள் மீதும், தலா 10 வழக்குகள் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தள தலைவர்கள் மீதும் போடப்பட்டுள்ளன.
மக்களாட்சியில் இருந்து இந்தியாவை அதிகாரத்தின் பிடியில் உள்ளவர்களின் கைகளுக்கு மாற்றுவதே பாஜனதாவின் இலக்கு. அவர்களது நோக்கம் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதாகும். எதிர்க்கட்சிகளை அழித்துவிட்டு ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். பாஜக ஒரு சலவை இயந்திரம். எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜனதாவில் இணைந்தால் அவர்கள் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குகள் முடிவுக்கு வந்துவிடும்" என்று அவர் தெரிவித்தார்.