'அன்னிய மண்ணில் நாட்டை இழிவுபடுத்துவதா?' - ராகுல் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்


அன்னிய மண்ணில் நாட்டை இழிவுபடுத்துவதா?  - ராகுல் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்
x

பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் ராகுல் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அமெரிக்காவில் சாண்டா கிளாராவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது அவர் பிரதமர் மோடியை கிண்டலடித்தார். "இந்தப் பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்பதை பிரதமர் மோடி, அந்தக் கடவுளுக்கே விளக்குவார்" என அவர் கூறினார்.

இது சர்ச்சையாகி இருக்கிறது.

பா.ஜ.க. கண்டனம்

ராகுலின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

ஒன்றுமே தெரியாத ஒருவர் திடீரென எல்லாம் அறிந்த நிபுணராக மாறியது வேடிக்கை. அவரது வரலாற்று அறிவு, அவரது குடும்பத்தைத் தாண்டிச் செல்லாது. அவர் வரலாற்றைப் பற்றி பேசுகிறார்.

உருளைக்கிழங்கில் இருந்து தங்கத்தை விளைவிப்பதாக கூறிக்கொண்ட ஒரு மனிதர் அறிவியல் பற்றி விரிவுரை ஆற்றுகிறார். குடும்ப விவகாரங்களைத் தாண்டிச் செல்லாத மனிதர், இந்தியாவின் போர் முறையை வழிநடத்த விரும்புகிறார்.

'போலி காந்தி'

அப்படி இல்லை, திரு போலி காந்தி. இந்தியாவின் அடிப்படையே அதன் கலாசாரம்தான். உங்களைப் போன்று அன்னிய மண்ணில் நாட்டை இழிவுபடுத்துவது அல்ல. இந்தியர்கள் தங்கள் வரலாறு குறித்து மிகவும் பெருமைப்படுகிறவர்கள். அவர்கள் தங்கள் புவியியலை மிக நன்றாக பாதுகாத்துக்கொள்கிறவர்கள் என்று அவர் கூறி உள்ளார்.


Next Story