உத்தரகாண்ட் பனிச்சரிவு - இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்பு; 2 மலையேற்ற வீரர்களை தேடும் பணி தீவிரம்!


உத்தரகாண்ட் பனிச்சரிவு - இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்பு; 2 மலையேற்ற வீரர்களை தேடும் பணி தீவிரம்!
x

இதுவரை மொத்தம் 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் உள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 29 பேர் கொண்ட குழு, அதே மாவட்டத்தில் உள்ள திரவுபதி கா தண்டா-2 மலைச்சிகரத்தில் கடந்த 4-ந் தேதி ஏறியது.

இவர்கள் சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தை அடைந்தபோது கடுமையான பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டன. இதில் விமானப்படை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப்படை என பெரும் படை களமிறக்கப்பட்டது. பனிச்சரிவில் சிக்கிக்கொண்ட பெரும்பாலானோர் உயிரிழந்து விட்டனர்.

திரவுபதி கா தண்டா-2 மலை சிகரத்திற்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில், தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்தன.

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 10 பேரின் உடல்கள் இன்று உத்தரகாசிக்கு கொண்டு வரப்பட்டன. முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று நான்கு உடல்கள் உத்தரகாசிக்கு கொண்டு வரப்பட்டன, அதை தொடர்ந்து நேற்று 7 உடல்கள் உத்தரகாசிக்கு கொண்டு வரப்பட்டன.

நேரு மலையேற்ற பயிற்சி நிறுவனம் தரப்பில் கூறுகையில், இன்னும் இரண்டு மலையேற்ற வீரர்களை இன்னும் காணவில்லை.இதுவரை மொத்தம் 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாசிக்கு கொண்டு வரப்பட்ட 21 உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த மலையேற்ற வீரர்கள் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story