'தமிழ் அமுதத்தின் சுவையை புத்தகம் மூலம் தான் உணர முடியும்'; ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்வக்குமார் பேச்சு


தமிழ் அமுதத்தின் சுவையை புத்தகம் மூலம் தான் உணர முடியும்; ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்வக்குமார் பேச்சு
x

தமிழ் அமுதத்தின் சுவையை புத்தகம் மூலம் தான் உணர முடியும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்வக்குமார் கூறினார்.

பெங்களூரு:

தமிழ் அமுதத்தின் சுவையை புத்தகம் மூலம் தான் உணர முடியும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்வக்குமார் கூறினார்.

புத்தக திருவிழா

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் டிசம்பர் மாதம் 25-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி (அதாவது இன்று) வரை 8 நாட்கள் தமிழ் புத்தக திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தமிழ் புத்தக திருவிழா கர்நாடக தலைநகர் பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையையொட்டி அமைந்து உள்ள பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் கடந்த 25-ந்தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது.

புத்தக திருவிழாவை விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர், தமிழ் புத்தக திருவிழா குழு தலைவர் வணங்காமுடி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து இருந்தனர். இந்த தமிழ் புத்தக திருவிழாவில் தினந்தந்தி அரங்கு உள்பட 25 புத்தக அரங்குகள் இடம்பெற்று இருந்தன. இந்த அரங்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புத்தகங்களை தமிழ் ஆர்வலர்கள், தமிழ் மக்கள் வாங்கி சென்றனர். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தக திருவிழா நடைபெற்று இருந்தது.

பட்டிமன்றம்

இந்த நிலையில் புத்தக திருவிழாவின் 7-வது நாளான நேற்று மாலை 5 மணிக்கு விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, டில்லிபாபு ஆகியோரின் நூல்களில் 'பெரிதும் விஞ்சி நிற்பது அறிவியலே! தமிழே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. தமிழ் புத்தக திருவிழாவின் குழு தலைவர் வணங்காமுடி தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் 'அறிவியலே!' என்ற தலைப்பில் இந்திரா ஜவகரும், 'தமிழே!' என்ற தலைப்பில் கார்த்தியாயினி, தேன்மொழியன் ஆகியோரும் பேசினர்.

இதனை தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சிந்தனை களம் நடந்தது. கர்நாடக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் செல்வக்குமார் சிந்தனை களத்திற்கு தலைமை வகித்தார். மகாராணி தொகுப்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் பசவராஜ், அருட்பெரும்ஜோதி வள்ளலார் சங்கத்தை சேர்ந்த ராமலிங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் சண்முகவேலன், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீதரன், போட்டோ யார்ட் மேலாண் இயக்குனர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்வக்குமார் பேசுகையில் கூறியதாவது:-

கர்நாடகத்திற்கு வந்து தங்களது தொழிலை தொடர்ந்து தமிழை வளர்த்து, பெருமையுடன் இன்று விழாவை ஏற்பாடு செய்து இருக்கும் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். கர்நாடக தமிழர்கள் இடையே புதிய எழுச்சியை தமிழ் புத்தக திருவிழா மூலம் ஏற்படுத்த முயற்சி எடுத்து இருக்கும் அனைவருக்கும் நன்றி. தமிழ் அமுதத்தின் சுவையை புத்தகம் மூலம் தான் உணர முடியும்.

கல்வியின் முக்கியத்துவத்தை கூறிய வள்ளுவருக்கும், இன்று சிறப்புரை ஆற்றிய அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன். இந்த விழாவில் எனக்கு தலைமை உரை ஆற்ற வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சிந்தனை உரை ஆற்றினார். கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் நாகசுந்தரி நன்றி உரை ஆற்றினார்.

கடந்த 7 நாட்களாக சீரோடும், சிறப்போடும் நடந்து வந்த தமிழ் புத்தக திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. இன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை கன்னட நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த நூலை கன்னட வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைவர் சித்தராமையா வெளியிட, கன்னட எழுத்தாளர் எம்.எஸ்.மணி பெற்று கொள்கிறார். இதனை தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் எழுதிய 'நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்' என்ற தமிழ் நூல் வெளியீடும் விழா நடக்கிறது.

தொடர்ந்து மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை இலக்கிய ஆளுமை விருதுகள் வழங்குதல் மற்றும் புத்தக திருவிழா நிறைவு விழா நடக்கிறது. கூடுதல் டி.ஜி.பி. முருகன் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில், மேற்கு வங்காள மாநில முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் பாலசந்திரன் சிறப்புரை ஆற்றுகிறார். நிறைவு நிகழ்ச்சியான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புத்தகங்களை அள்ளி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story