புத்தக திருவிழாவில் இன்று 2 ஆயிரம் தமிழ் குழந்தைகளுக்கு புத்தக பரிசு கூப்பன் வழங்கும் விழா


2 ஆயிரம் தமிழ் குழந்தைகளுக்கு புத்தக பரிசு கூப்பன் வழங்கும் விழா தமிழ் புத்தக திருவிழாவில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

பெங்களூரு:

2 ஆயிரம் தமிழ் குழந்தைகளுக்கு புத்தக பரிசு கூப்பன் வழங்கும் விழா தமிழ் புத்தக திருவிழாவில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

மயில்சாமி அண்ணாதுரை

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் கர்நாடக தமிழ் பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் ஆகியவை சார்பில் தமிழ் புத்தக திருவிழா தொடக்க விழா கடந்த 25-ந்தேதி பெங்களூரு தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு அந்த திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிசாத் மனோகர் மற்றும் தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவின் 3-வது நாள் நிகழ்ச்சிகள் நேற்று அல்சூரில் உள்ள தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றன. இதில் காலையில் மாயவித்தை அதாவது மாயாஜால நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேபி ஜெபகுமார் பங்கேற்று தனது மாயவித்தைகளை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வியக்க செய்தார். அதைத்தொடர்ந்து மொழித்திறன், ஓவியம், நடன போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலையில் சிந்தனைக்களம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எழுத்தாளரான பாவலர் அறிவுமதி கலந்து கொண்டு சிந்தனை உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

வேளாண்மை அறிவியல்

தமிழர்கள் செயற்கை மலைகளை உருவாக்கினர். பூக்களை பறித்து நமது பெண்கள் தலையில் வைக்கிறார்கள். அதன் பின்னால் வேளாண்மை அறிவியல் உள்ளது. நமது ஊரில் விளையும் பூக்கள் அமெரிக்கா வரை விமானத்தில் செல்கிறது. பூக்களை மொட்டுகளிலேயே எடுக்கும்போது தான் எள்ளின் மகசூல் நமக்கு கிடைக்கிறது. இதை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கண்டுபிடித்தான். இந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.

நெல் அறுவடை செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்பு விவசாயி தனது நெல் வயலுக்கு சென்று பறை இசை கருவியை கொண்டு சத்தத்தை வர செய்வார். அதற்கு நாளை நாங்கள் நெல் அறுவடை செய்கிறோம், அதனால் இந்த வயலில் குஞ்சு பொறிக்க முட்டை அடை காக்கும் பறவை இனங்களே நீங்கள் இன்று இரவுக்குள் வேறு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடுங்கள் என்று சொல்கிறார்.

நெல் பயிர்கள்

சிட்டு குருவிக்கு இரண்டு பெயர்கள் உண்டு. ஒன்று சிட்டு குருவி. இன்னொரு பெயர் ஊர் குருவி. அறுவடை ஆகும் வரை சிட்டு குருவிகள் நெல் கதிர்களில் உள்ள பூச்சிகளை உண்ணும். இதன் மூலம் நெல் பயிர்கள் காக்கப்படும். அதனால் இந்த சிட்டு குருவி வேளாண்மைக்கு பயன்படும் பறவை இனம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று தமிழர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்கள்.

இவ்வாறு அறிவுமதி பேசினார்.

புத்தக கூப்பன் சீட்டு

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் பாரத் கல்வி குழும தலைவர் புனிதா கணேசன் தலைமை தாங்கினார். கர்நாடக மாநில தி.மு.க. அமைப்பாளர் ராமசாமி, தொழில் அதிபர் மீனாட்சி சுந்தரம், தமிழ் ஆர்வலர் ஆரோக்கியநாதன், எஸ்.எம்.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புத்தக கண்காட்சியில் 25 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அனைத்து விதமான தமிழ் புத்தகங்களும் கிடைக்கின்றன. முதல் முறையாக பெங்களூருவில் புத்தக திருவிழா நடைபெறுவதால், பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வமாக வந்து தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள்.

பெங்களூரு தமிழ்ச்சங்க கட்டிடத்தில் இன்று (புதன்கிழமை) 2 ஆயிரம் தமிழ் குழந்தைகளுக்கு தலா ரூ.150 மதிப்புள்ள புத்தக கூப்பன் சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கலந்து கெண்டு அந்த கூப்பன்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி மாலை 4.30 மணியளவில் நடக்கிறது.


Next Story