காங்கிரஸ் புதிய தலைவர் காந்தி குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படுவாரா? - ராகுல்காந்தி பதில்
காங்கிரஸ் புதிய தலைவர் காந்தி குடும்பத்தால் ரிமோட்-கண்ட்ரோலாக கட்டுப்படுத்தப்படுவார்களா? என்ற்ச கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போட்டியிடுகின்றனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, புதிய காங்கிரஸ் தலைவர் காந்தி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ரிமோட் கண்ட்ரோலாக இருப்பார்கள் என பாஜக விமர்சித்து வருகிறது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை பயணம் 31-வது நாளான இன்று கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், தும்கூர் மாவட்டத்தில் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் தலைவர் காந்தி குடும்பத்தின் ரிமோட்-கண்ட்ரோலாக கட்டுப்படுத்தப்படுத்தப்படுவார்கள்? என்று விமர்சனம் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் களமிறங்கியுள்ள மல்லிகார்ஜூனகார்கே மற்றும் சசிதரூர் ஆகிய 2 தலைவர்களும் நிலைப்பாடு உள்ளது. அவர்களுக்கு கண்ணோட்டம் உள்ளது. அவர்களுக்கு மக்களிடம் நன்மதிப்பு உள்ளது. 2 தலைவர்களும் மக்களை புரிந்துகொள்ளும் நபர்கள் ஆவர். 2 தலைவர்களில் யாரும் ரிமோர்ட் கண்ட்ரோல்ட் காங்கிரஸ் தலைவராக செயல்படமாட்டார்கள். இன்னும் கூறவேண்டுமானால் ரிமோட் கண்ட்ரோலாக இருப்பார்கள் என கூறுவது அவர்கள் 2 பேரையும் அவமதிப்பதாகும்.
இந்திய ஒற்றுமை யாத்திரையை நான் தனியாக இல்லை. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சமத்துவமின்மையால் சோர்ந்துபோன லட்சக்கணக்கான மக்கள் என்னுடன் இந்த யாத்திரையில் இணைந்துள்ளனர்.
வெறுப்புணர்வௌ மற்றும் வன்முறையை பரப்புவது தேசத்துரோக செயல். அந்த செயலை செய்பவர்களை யார் செய்தாலும் நாங்கள் அவர்களை எதிர்த்து போராடுவோம்.
நமது வரலாறு மற்றும் மரபுகளை சிதைப்பதால் நாங்கள் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம். பரவலாக்கப்பட்ட கல்வி முறையை நாங்கள் விரும்புகிறோம். பாரத் ஜோடோ யாத்திரை 2024-ம் ஆண்டு தேர்தலுக்கானது அல்ல. பாஜக - ஆர்எஸ்எஸ் -ஆல் பிளவுபடுத்தப்படும் இந்திய மக்களை ஒன்றிணைக்க காங்கிரஸ் விரும்புகிறது' என்றார்.