இந்த மாத இறுதிக்குள் பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் - மந்திரி கே.எச்.முனியப்பா பேட்டி


இந்த மாத இறுதிக்குள் பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் - மந்திரி கே.எச்.முனியப்பா பேட்டி
x
தினத்தந்தி 1 July 2023 6:45 PM GMT (Updated: 2 July 2023 5:23 AM GMT)

இந்த மாத இறுதிக்குள் பி.பி.எல். அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என்று மந்திரி கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் நேற்று உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியின்படி அன்னபாக்ய திட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இன்று (நேற்று) முதல் 5 கிலோ அரிசி வழங்கப்படும். கூடுதலாக நாங்கள் வழங்குவதாக அறிவித்த 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதும் இன்றே தொடங்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் பணம் வழங்குவது முடிக்கப்படும்.

மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக 1.29 கோடி பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 99 சதவீத பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்கள் அரசிடம் உள்ளது. 6 லட்சம் பேர் மட்டுமே வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காமல் உள்ளனர். எனவே பி.பி.எல். அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும்.

அரிசிக்கு பதில் பணம் வழங்குவதும் தொடங்கப்பட்டு இருக்கிறது. தொழில்நுட்பரீதியாக எந்த விதமான பிரச்சினையும் இல்லை. ஏதேனும் பிரச்சினை உண்டானல், அதனை அதிகாரிகள் சரி செய்வார்கள். பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் டெபாசிட் செய்யும் பணியையும் தொடங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்னபாக்ய திட்டத்தின் கீழ் வருகிற 10-ந் தேதியில் இருந்து தான் பணம் வழங்கப்படும் என்று சித்தராமையா கூறி இருப்பது பற்றி மந்திரி கே.எச்.முனியப்பாவிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர், இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story