காங்கிரசின் 5 உத்தரவாத திட்டங்கள் எதிரொலி; கர்நாடகத்தில் பி.பி.எல். ரேஷன் கார்டு கோரி 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்


காங்கிரசின் 5 உத்தரவாத திட்டங்கள் எதிரொலி; கர்நாடகத்தில் பி.பி.எல். ரேஷன் கார்டு கோரி 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

காங்கிரசின் 5 உத்தரவாத திட்டங்களை பெறுவதற்காக பி.பி.எல். ரேஷன் கார்டு கோரி 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ெபங்களூரு:

காங்கிரசின் 5 உத்தரவாத திட்டங்களை பெறுவதற்காக பி.பி.எல். ரேஷன் கார்டு கோரி 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

காங்கிரசின் 5 உத்தரவாத திட்டங்கள்

கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரமும், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000-ம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு தலா ரூ.1,500-ம் வழங்கப்படும் எனவும், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பி.பி.எல். ரேஷன் கார்டு தாரர்களுக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ தானியங்களும் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அளித்திருந்தது.

இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என சித்தராமையா தலைமையில் நடந்த முதல், மந்திரிசபை கூட்டத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல் மின் மீட்டரை அளவீடு செய்து மின்கட்டணம் கணக்கிடும் பணிக்காக செல்லும் மின்வாரிய ஊழியர்களிடம் பொதுமக்கள், மின்கட்டணம் செலுத்த மாட்டோம் என கூறி தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பி.பி.எல். ரேஷன் கார்டு

அதுபோல் அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள், இலவச பயண திட்டத்தை அறிவித்துள்ளதால் டிக்கெட் எடுக்க மாட்டோம் எனவும் கூறி வருகிறார்கள். ஆனால் இந்த 5 உத்தரவாத திட்டங்களை நிபந்தனைகளுடன் செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கர்நாடக அரசின் 5 உத்தரவாத திட்டங்களை பெறுவதற்காக பலரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் பி.பி.எல். ரேஷன் கார்டுகளை வாங்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14-ந்தேதி முதல் தாலுகா அலுவலகம், அரசின் சேவை மையங்களில் பி.பி.எல். ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

80 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கடந்த 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பி.பி.எல். ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் தினமும் 100-க்கும் அதிகமானோர் பி.பி.எல். ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து உணவு, குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரி ஞானேந்திரா கூறியதாவது:-

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நிறுத்தம்

கர்நாடகத்தில் மொத்தம் 4 கோடி பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே உணவு பொருட்கள் வழங்கும் நிலை உள்ளது. ஆனால் கூடுதலா 30 லட்சம் பி.பி.எல். ரேஷன் கார்டுகள் உள்ளன. எனவே புதியதாக பி.பி.எல். ரேஷன் கார்டுகள் கேட்பவர்களின் விண்ணப்பங்கள், அவர்கள் கொடுத்துள்ள வருமான விவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது பி.பி.எல். கார்டு கேட்டு அதிகமானோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கிறார்கள். இதனால் தற்காலிகமாக பி.பி.எல். கார்டு கேட்டு விண்ணப்பிக்க பயன்படுத்தப்படும் இணையதள சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம். ஜூன் முதல் வாரத்தில் பொதுமக்கள் ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இணையதள சேவை திறக்கப்படும். தகுதியானவர்களுக்கு மட்டுமே பி.பி.எல். கார்டு வழங்கப்படும். மற்றவர்களின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும்.

கடும் நடவடிக்கை

கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் மாநிலத்தில் 3 லட்சம் போலி பி.பி.எல். ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பி.பி.எல்.கார்டு வைத்திருந்தால், அது ரத்து செய்யப்படும். அதுபோல் அரசு ஊழியர்கள் பி.பி.எல். ரேஷன் கார்டுகள் வைக்ககூடாது. வருமானவரி செலுத்தி 3 எக்டேர் நிலம் வைத்திருப்பவர்களும் பி.பி.எல். ரேஷன் கார்டு வைத்திருக்க கூடாது. இதை மீறி யாராவது சட்டவிரோதமாக பி.பி.எல். ரேஷன் கார்டுகள் வைத்திருந்தால், திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story