சுரங்கப்பாதையை பயன்படுத்த பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
சிட்டி பஸ் நிலையம் அருகே சுரங்கப்பாதையை பயன்படுத்த பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளதாகவும், அடிக்கடி விபத்துகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் உப்பார்பேட்டை போக்குவரத்து போலீசார், சிட்டி ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்திற்கும் சாலையை கடந்து வரும் பொதுமக்களை, அந்த பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இதற்காக அந்த பகுதியில் போலீஸ்காரர் ஒருவர் நின்று, அவர்களை சாலையை கடக்கவிடாமல், சுரங்கப்பாதையை பயன்படுத்த வலியுறுத்தி வருகிறார். அந்த பகுதியில் பஸ்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால், முதியவர்கள், சிறுவர்கள் பஸ்களில் சிக்கி உயிரிழக்க வாய்ப்புள்ளதால் சுரங்கப்பாதையை கட்டாயம் பயன்படுத்த அறிவுறுத்துவதாக போலீசார் கூறுகின்றனர். மேலும், அந்த பகுதியில் அதுதொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.