மராட்டியத்தில் கொடூரம்: லிவ்-இன் காதலியை கொன்று படுக்கைக்கு அடியில் மறைத்த காதலர்


மராட்டியத்தில் கொடூரம்: லிவ்-இன் காதலியை கொன்று படுக்கைக்கு அடியில் மறைத்த காதலர்
x

டெல்லியை தொடர்ந்து மராட்டியத்தில் லிவ்-இன் காதலியை கொன்று படுக்கைக்கு அடியில் காதலர் மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிப்பட்டு உள்ளது.



பால்கார்,


மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் நலசோப்ரா நகரில் விஜய் நகர் பகுதியில் சீதா சதன் குடியிருப்பில் லிவ்-இன் முறையில் ஹர்தீக் ஷா என்ற 27 வயது வாலிபரும், மேகா தனசிங் தோர்வி என்ற 35 வயது பெண்ணும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்து உள்ளனர்.

அவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட், வீட்டு உரிமையாளர் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களிடம் தங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என கூறியுள்ளனர்.

இந்நிலையில், அந்த பிளாட்டில் இருந்து அழுகிய நிலையில் வாடை வந்து உள்ளது. உடனடியாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீசில் தெரிவித்து உள்ளனர்.

போலீசார் அந்த வாடகை வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில், படுக்கைக்கு கீழே மேகாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்து உள்ளது. மூத்த காவல் ஆய்வாளர் ஷைலேந்திரா நாகர்கர் கூறும்போது, கடந்த வாரம் மேகா கொல்லப்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

அவருடன் ஒன்றாக லிவ்-இன் முறையில் வசித்து வந்த ஹர்தீக் ஷா தப்பி செல்ல முயன்று உள்ளார். அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் வேலையில்லாமல் இருந்து உள்ளார். இதனால், அந்த ஜோடிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதுபோன்று ஒரு முறை சண்டை நடக்கும்போது, மேகாவை அவர் கொலை செய்து விட்டார். ஆனால், எந்த தேதியில் சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், இதுபற்றி தனது சகோதரிக்கு ஹர்தீக் குறுஞ்செய்தி அனுப்பி தகவல் தெரிவித்து உள்ளார். தப்பி செல்வதற்கு முன் பிளாட்டில் இருந்த நாற்காலி உள்ளிட்ட மர பொருட்களை அவர் விற்று உள்ளார். இதுபற்றி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியின் நஜாப்கார் நகரில் மித்ராவன் கிராமப்புறத்தில் சாலையோர பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்து உள்ளது. இதில் உள்ள பிரீசரில், 25 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

துவாரகா நகர கூடுதல் காவல் துணை ஆய்வாளர் விக்ரம் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, மித்ராவன் கிராமத்தில் வசிக்கும் உணவு விடுதி உரிமையாளரான சாஹில் கெலாட் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து உள்ளோம்.

தொடக்க விசாரணையில், இந்த பெண்ணுடன் சாஹில் லிவ்-இன் உறவில் இருந்து வந்து உள்ளார். இந்நிலையில், மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண் அவரிடம் சென்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் போன் சார்ஜருக்கான வயரை கொண்டு கழுத்தில் இறுக்கி பெண்ணை கொலை செய்து உள்ளார். அவரது உடலை காரில் கொண்டு சென்று, உணவு விடுதியில் உள்ள பிரீசரில் மறைத்து வைத்து உள்ளார்.

சம்பவம் 2 முதல் 3 நாட்களுக்குள் நடந்திருக்க கூடும் என நேற்று கூறினார். அந்த பெண் நிக்கி யாதவ் என்பது தெரிய வந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண், அவரது காதலரான அப்தாப் என்பவரால் கொலை செய்யப்பட்டு, 35-க்கும் மேற்பட்ட துண்டுகளாக ஆக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


Next Story