ஏழைகள் மீதான மோடி அரசின் அமைதி தாக்குதல்: மத்திய பட்ஜெட் பற்றி சோனியாகாந்தி கருத்து


ஏழைகள் மீதான மோடி அரசின் அமைதி தாக்குதல்: மத்திய பட்ஜெட் பற்றி சோனியாகாந்தி கருத்து
x

கோப்புப்படம்

ஏழைகள் மீதான மோடி அரசின் அமைதி தாக்குதல்தான் மத்திய பட்ஜெட் என்று சோனியாகாந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஒரு ஆங்கில பத்திரிகையில் மத்திய பட்ஜெட் குறித்து எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரை பலி கொடுத்து, தன்னுடைய நண்பர்களுக்கு உதவி செய்யும் பிரதமர் மோடியின் கொள்கை, தொடர் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. பணமதிப்பிழப்பு, தவறாக வடிவமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவை அவற்றில் அடங்கும்.

தனியார்மயமாக்கலால், விலைமதிப்பற்ற தேசிய சொத்துகள், குறிப்பிட்ட தனியார் கையில மலிவு விலைக்கு தாரைவார்க்கப்பட்டன. இதனால், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் வேலை இழந்துள்ளனர்.

கைகோர்க்க வேண்டும்

பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி.யும், பாரத ஸ்டேட் வங்கியும் பிரதமரின் நண்பர்களால் மோசமாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்ய வைக்கப்படுகின்றன. இதனால், ஏழைகள் கஷ்டப்பட்டு ஈட்டிய பணம் அச்சுறுத்தலில் இருக்கிறது.

பிரதமருக்கு பிடித்தமான தொழிலதிபர் குறித்து நிதி மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நேரத்திலும், 'விஸ்வ குரு' என்றும், 'அமிர்த காலம்' என்றும் பிரதமரும், மந்திரிகளும் முழங்கி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் கருத்தொற்றுமை கொண்ட இந்தியர்கள் கைகோர்த்து, மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்க்க வேண்டிய கடமை உள்ளது.

அமைதி தாக்குதல்

சமீபத்தில் முடிவடைந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை யாத்ரீகர்கள் நடந்தனர். வழியெங்கும் லட்சக்கணக்கானோரை சந்தித்து உரையாடினர். அனைவரும் நாட்டின் பொருளாதார சிக்கல், ஏமாற்றம் குறித்தே பேசினர்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, வருவாய் வீழ்ச்சி என்ற 3 வித அச்சுறுத்தல்களால் ஏழைகளும், நடுத்தர வகுப்பினரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண வேண்டிய மத்திய பட்ஜெட், ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான நிதிஒதுக்கீட்டை குறைத்துள்ளது.

அதனால், இந்த பட்ஜெட் ஏழைகள் மீதான மோடி அரசின் அமைதி தாக்குதல். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உரிமைகள் சார்ந்த சட்டங்களின் இதயம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டம்

பிரதமர் மோடி, 100 நாள் வேலைத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் கேலி செய்தார். ஆனால், கொரோனா காலத்தில் அதுதான் உதவியாக இருந்தது. தற்போது, அந்த திட்டத்துக்கான நிதிஒதுக்கீட்டை குறைத்துள்ளார். இதனால், கிராமப்புற தொழிலாளர்களுக்கு குறைந்தளவே வேலை கிடைக்கும்.

சர்வ சிக்ஷ அபியான் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால், பள்ளிகளுக்கான நிதி குறையும். மதிய உணவு நிதி குறைக்கப்பட்டதால், மாணவர்களுக்கு குறைவான அளவுதான் சத்தான உணவு கிடைக்கும்.

ஒருபக்கம் நிதி குறைப்பும், மற்றொரு பக்கம் விலைவாசி உயர்வும் சேர்ந்து ஏழைகளை நேரடியாக துன்புறுத்துகிறது. எதிர்பார்த்ததுபோல், பிரதமர் அமைதி காக்கிறார்.

மூலதன செலவுகளுக்கான நிதி தேவைக்காக இந்த நிதியை குறைத்துள்ளனர். இருப்பினும், அந்த நிதியும் பிரதமரின் நண்பர்களுக்குத்தான் செல்லும். அதே சமயத்தில், மனித வளத்தை பலிகொடுத்து, உள்கட்டமைப்புக்கு செலவிடுவது தவறு என்று அவர் கூறியுள்ளார்.


Next Story