பெங்களூருவில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்


பெங்களூருவில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்
x

பெங்களூருவில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது.

பெங்களூரு:

பெங்களூருவில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது.

ஆக்கிரமிப்புகள் காரணம்

பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், சர்ஜாப்புரா ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள லே-அவுட்டுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள் கட்டியதே மழை பாதிப்பு ஏற்பட காரணம் என்று தெரியவந்தது.

இதனால் நேற்று முன்தினம் மகாதேவபுரா மண்டலத்தில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி நடந்தது.

3 மாதத்திற்கு முன்பே நோட்டீசு

நேற்றும் 2-வது நாளாக மகாதேவபுரா, எலகங்கா மண்டலங்களில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது. மகாதேவபுராவில் உள்ள பாப்பிரெட்டிபாளையா, சாந்தி நிகேதன் லே-அவுட் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதற்கு கட்டிடங்களின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் போலீஸ் பாதுகாப்புடன் சாந்தி நிகேதன் லே-அவுட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.இதுபோல சாந்திநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.ஏ.ஹாரீசின் மகன் முகமது நலபட்டுக்கு சொந்தமான கட்டிடமும் இடிக்கப்பட்டது. இதற்கிடையே சாந்தி நிகேதன் லே-அவுட்டில் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள், கட்டிடங்களை காலி செய்ய வேண்டும் என்று 3 மாதத்திற்கு முன்பே உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு அனுப்பியதாகவும், ஆனால் அந்த நோட்டீசை உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தேசிய உயிரியல் அறிவியல் மையம்

பெங்களூருவில் 10-க்கும் மேற்பட்ட ஐ.டி.நிறுவனங்கள் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஐ.டி.நிறுவனங்களின் கட்டிடங்கள் இடித்து அகற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே எலகங்கா நியூ டவுனில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய உயிரியல் அறிவியல் மையமும் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு ஆக்கிரமிப்பை அகற்ற நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர்களை அறிவியல் மையத்திற்குள் செல்ல விடாமல் காவலாளிகள் தடுத்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள், காவலாளிகள் இடையே வாக்குவாதம் உண்டானது. பின்னர் நீண்ட நேரம் கழித்து உள்ளே சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.


Next Story