உத்தரகாண்ட் இளம்பெண் கொலை: குற்றவாளிகளை தூக்கிலிட முடியாவிட்டால் உயிருடன் எரிக்க வேண்டும்! பெண்ணின் தாய் கோரிக்கை


உத்தரகாண்ட் இளம்பெண் கொலை: குற்றவாளிகளை தூக்கிலிட முடியாவிட்டால் உயிருடன் எரிக்க வேண்டும்! பெண்ணின் தாய் கோரிக்கை
x

உத்தரகாண்ட் சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்கு சொந்தமான ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் வரவேற்பாளர் ஆக பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக சனிக்கிழமை காலை மீட்கப்பட்டார்.

இது குறித்து 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற அந்த இளம்பெண்ணின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யாவின் தந்தையான வினோத் ஆர்யாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது.

விசாரணையில், அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், அங்கிதா பண்டாரியின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இந்த நிலையில், குற்றவாளிகளை தூக்கிலிட முடியாவிட்டால் உயிருடன் எரித்து விடுங்கள் என அங்கிதா பண்டாரியின் தாய் கூறியுள்ளார்.

அங்கிதா பண்டாரியின் தாயார், திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது, "எனது மகளைக் கொன்ற குற்றவாளிகளை, சட்டத்தின்படி தூக்கிலிட முடியாவிட்டால், குற்றவாளிகளை அவர்களின் வீடுகளுக்கு முன்பாக உயிருடன் எரிக்க வேண்டும்.

மகளின் இறுதிச் சடங்குகள் எனக்குத் தெரிவிக்காமல் நடத்தப்பட்டன. அவளுடைய தகனம் பற்றி அவர்கள் என்னிடம் சொல்லவில்லை. மேலும், அரசு நிர்வாகம் அவளது இறுதிச் சடங்குகளை நடத்துவதில் அவசரப்படுத்தியது" என்று கூறினார்.

இந்த நிலையில், அங்கிதா பண்டாரியின் குடும்பத்தினர் மற்றும் ஸ்ரீகோட் பகுதி உள்ளூர்வாசிகள் இணைந்து காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ராவத் மூலம் அம்மாநில முதல் மந்திரியிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தனர்.

புல்கித் ஆர்யா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தூக்கிலிட வேண்டும் என்றும் புல்கித் ஆர்யாவின் சகோதரர் மற்றும் தந்தையை, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், அதில் கூறப்பட்டுள்ளதவது:- அங்கிதாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், அவரது பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும், ரிசார்ட் இருந்த இடத்தில் அரசு கல்லூரி தொடங்கப்பட வேண்டும், அங்கிதாவின் பெயரில் ஒரு நினைவுத் தளம் கட்டப்பட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்டில் காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அசோக் குமார் கூறுகையில்:-

"இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புல்கித் ஆர்யா உட்பட மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கொலையின் பின்னணியில் உள்ள உண்மை விரைவில் வெளிவரும். சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஒன்று இன்று ரிசார்ட்டுக்கு சென்றுள்ளது.

புலனாய்வுக் குழு சில நாட்கள் அங்கு முகாமிட்டு வழக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்கும். ரிசார்ட் சட்டவிரோதமானதா? அல்லது ரிசார்ட்டில் சட்டவிரோத வணிகம் நடக்கிறதா? என இரண்டு வகையான விசாரணைகள் இருக்கும்" என்றார்.


Next Story