பீகாரில் பயங்கரம்: தொழிலதிபர் சுட்டுக்கொலை, மனைவி படுகாயம்..!
பீகாரில் மனைவியுடன் வீடு திரும்பும் வழியில் தொழிலதிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் கோவிலில் பூஜை செய்துவிட்டு மனைவியுடன் வீடு திரும்பும் வழியில் தொழிலதிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார்-மேற்கு வங்க எல்லையில் உள்ள அசம்நகர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த தொழிலதிபர் கெளபாரி கிராமத்தைச் சேர்ந்த மேக்நாத் யாதவ் (வயது 35) ஆவார். மேக்நாத் தன்னுடைய மனைவியுடன் உள்ளூரில் உள்ள கோவிலில் இன்று காலையில் பூஜை செய்துவிட்டு பைக்கில் வீடு திரும்பினார்.
அப்போது, திடீரென மர்ம நபர்கள் மேக்நாத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் மேக்நாத்தின் மனைவி உடலிலும் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் அசம்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் மேக்நாத் உயிரிழந்ததாக தெரிவித்தனர். படுகாயமடைந்த அவர் மனைவி கதிஹார் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அசம்நகர் காவல் நிலைய ஹவுஸ் அதிகாரி ராஜீவ் ஜா கூறுகையில் மேக்நாத்திற்கு அவரது மைத்துனருடன் சொத்து தகராறு இருந்ததாகவும் இந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.