அரசு மின்னணு சந்தை தளத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுமதி - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
அரசு மின்னணு சந்தை தளத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், 'கவர்ன்மெண்ட் இ-மார்க்கெட்பிளேஸ்' (ஜி.இ.எம்.) எனப்படும் அரசாங்க மின்னணு சந்தை தளத்தில் பொருட்களை கொள்முதல் செய்ய கூட்டுறவு அமைப்புகளையும் அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அரசு துறைகள் மலிவு விலையில் ஒளிவுமறைவின்றி கொள்முதல் செய்வதற்காக கடந்த 2016-ம் ஆண்டு மத்திய வர்த்தக அமைச்சகம் இந்த தளத்தை தொடங்கியது. அதில், தனியார் துறையினரும் பொருட்களை விற்கலாம். ஆனால், அரசு துறைகள் மட்டுமே வாங்க முடியும். தனியார் வாங்க முடியாது.
இந்தநிலையில்தான், கூட்டுறவு அமைப்புகளும் பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பதிவு செய்யப்பட்ட 8 லட்சத்து 54 ஆயிரம் கூட்டுறவு அமைப்புகளும், அவற்றின் 27 கோடி உறுப்பினர்களும் பலன் அடைவார்கள் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்தார்.