குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க ராமநகரில் சாலையோரம் கண்காணிப்பு கேமராக்கள்; டி.கே.சிவக்குமார் உத்தரவு


குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க ராமநகரில் சாலையோரம் கண்காணிப்பு கேமராக்கள்; டி.கே.சிவக்குமார் உத்தரவு
x
தினத்தந்தி 26 Jun 2023 8:55 PM GMT (Updated: 27 Jun 2023 10:18 AM GMT)

குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க ராமநகரில் சாலையோரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க ராமநகரில் சாலையோரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நல்லாட்சி நிர்வாகம்

ராமநகர் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ராமநகரில் நேற்று நடைபெற்றது. இதற்கு ராமநகர் மாவட்ட பொறுப்பு மந்திரி ராமலிங்கரெட்டி தலைமை தாங்கினார். இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். மக்கள் ஏதோ விளையாட்டுக்கு காங்கிரசை ஆதரிக்கவில்லை. காங்கிரசார் நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துவாா்கள் என்று கருதி மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். பா.ஜனதாவின் ஆட்சியை மக்கள் பார்த்தனர். ஊழல்கள் அதிகமாக நடந்ததால் மக்கள் அந்த கட்சியை தோற்கடித்தனர்.

வருகை பதிவு

ராமநகர் மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ராமநகரில் தங்கி பணியாற்ற வேண்டும். பெங்களூருவில் குடியிருந்து கொண்டு இங்கு வந்து பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். நீங்கள் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம். அதே போல் யாரிடமும் லஞ்சம் பெற வேண்டாம். உங்களை பணியிட மாற்றம் செய்ய மாட்டேன். உங்களிடம் இருந்து எப்படி வேலை வாங்குவது என்பது எனக்கு தெரியும். தடம் புரள வேண்டாம்.

அதிகாரிகள் 'பயோமெட்ரிக்' வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களை தகுதியான பயனாளிகளுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும். சிலர் தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் என்று ஏமாற்றுகிறார்கள். அத்தகையவர்களை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம். இந்த மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள்

பெங்களூருவில் இருந்து குப்பை கழிவுகளை கொண்டு வந்து இங்கு போட்டுவிட்டு செல்கிறார்கள். அதனால் சாலையோரம் கேமராக்களை பொருத்தி குப்பை கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணிக்க வேண்டும். அரசின் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதில் எந்த முறைகேடுகளுக்கும் இடம் தரக்கூடாது. ராமநகரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ராமநகருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. பா.ஜனதா ஆட்சியில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. எங்கள் மீது பழியை சுமத்த அக்கட்சியினர் முயற்சி செய்கிறார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Next Story