யோகி ஆதித்யநாத், ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் பிரசாரம்


யோகி ஆதித்யநாத், ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் பிரசாரம்
x

கர்நாடகத்தில் நாளை(புதன்கிழமை) உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

பெங்களூரு:-

யோகிஆதித்யநாத்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் நேற்று கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நாளை(புதன்கிழமை) கர்நாடகம் வருகிறார். இங்கு அவர் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

அன்றைய தினம் காலை 8 மணிக்கு லக்னோவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூரு வரும் அவர், அங்கிருந்து மண்டியாவுக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரிக்கிறார். அதன் பிறகு அவர் மைசூருவுக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் உப்பள்ளிக்கு செல்கிறார். விஜயாப்புராவுக்கு சென்று பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் லக்னோ புறப்பட்டு செல்கிறார்.

ராஜ்நாத்சிங்-நிர்மலா சீதாராமன்

அதேபோல் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் நாளை கர்நாடகம் வந்து பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் பெலகாவி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் நாளை கர்நாடகம் வந்து கலபுரகி மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.


Next Story