உ.பி.யில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீசார் மீது வழக்குப்பதிவு


உ.பி.யில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீசார் மீது வழக்குப்பதிவு
x

கோப்புப்படம் 

போலீஸ் இன்ஸ்பெக்டரின் தொப்பியுடன் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மாவட்ட எஸ்.பி. அனூப் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நேற்றைய தினம் ஜாமோ காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் சிலர் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், அப்போது தனது கணவர் வீட்டில் இல்லை என்றும் அந்த பெண் கூறியுள்ளார். தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீசார், தன்னுடைய ஆடையை கிழித்து ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டதாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது இரு பெண்களும் கூச்சலிட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்துள்ளனர். அப்போது போலீசார் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரது தொப்பியை அந்த வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அந்த தொப்பியுடனேயே காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து மாவட்ட எஸ்.பி. அனூப் குமார் கூறுகையில், "அந்த பெண்ணின் புகார் கவுரிகஞ்ச் வட்ட அதிகாரி மயங்க் திவேதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.


Next Story