பெண்கள் குறித்து ஆபாச கருத்து தெரிவித்ததாக வழக்கு - எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


பெண்கள் குறித்து ஆபாச கருத்து தெரிவித்ததாக வழக்கு - எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x

பெண்கள் குறித்து ஆபாச கருத்து தெரிவித்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எச்.ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பெண்கள் குறித்தும், பெரியார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாச கருத்துகளை பதிவிட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு தி.மு.க. நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் காவல்நிலைய போலீசார் எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் எச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் எச்.ராஜா மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது எச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண்களை அவமதிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் எச்.ராஜா கருத்து தெரிவிக்கவில்லை என வாதிட்டார். இந்நிலையில், எச்.ராஜா தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.




Next Story