காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - பிரதமர் மோடியை சந்தித்து முறையிட முடிவு


காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - பிரதமர் மோடியை சந்தித்து முறையிட முடிவு
x

காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு,

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகாவில் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, குமாரசாமி, வீரப்ப மொய்லி, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா மற்றும் எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது பற்றி தற்போது உள்ள நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் போதிய மழை பெய்யாததால் இடர்பாடு சூத்திரத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. மேகதாது திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

இதையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இதுவரை 24 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. மழை குறைவு, காவிரி படுகையில் மழை இல்லாததால் போதிய அளவு தண்ணீர் திறக்க முடியவில்லை.

5-6 ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை பற்றாக்குறை ஏற்பட்டு இத்தகைய இடர்பாடான நிலை உருவாகிறது. அதுபோல் இந்த ஆண்டு இடர்பாடு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

இதுபற்றி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கா்நாடகம் சார்பில் எடுத்து கூறினோம். அவர்கள், வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கும்படி உத்தரவிட்டனர். அந்த அளவுக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகம் தரப்பில் எடுத்து கூறப்பட்டது. இதையடுத்து நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைத்து உத்தரவிட்டனர். அதனையும் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுள்ளோம்.

மேட்டூர் அணையில் 63 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. அவர்களுக்கு (தமிழகம்) குறுவை சாகுபடிக்கு 32 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே போதுமானது. ஆனால் அவர்கள் அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்து 60 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீரை பயன்படுத்தி உள்ளனர். ேமட்டூர் அணையில் இன்னும் தண்ணீர் உள்ளது. ஆனாலும் நீர் திறக்க வேண்டும் என்று நம்மிடம் கேட்கிறார்கள்.

இடர்பாடு சூத்திரம்

கர்நாடக விவசாயிகளின் நலன் காக்க வேண்டும். இதனால் இடர்பாடு சூத்திரத்தை பின்பற்ற வேண்டும். இந்த சூத்திரம் இதுவரை வகுக்கப்படவில்லை. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் எடுத்து கூறுவோம். மேகதாதுவில் புதிய அணை கட்டினால் இதுபோன்ற இடர்பாடான சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது.

ஆனால் எந்த காரணமும் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. நாங்கள் மேகதாது திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயாரித்து அனுமதிக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

பிரதமரை சந்திக்க...

சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 25-ந்தேதி (நாளை) காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் மனு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின்போது கர்நாடகம் தரப்பில் ஆஜராகும் வக்கீல்கள் திறமையான முறையில் வாதத்தை எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்துக்கட்சி குழுவை டெல்லி அழைத்து செல்வது குறித்து ஆலோசித்தோம். அதுகுறித்து வரும் நாட்களில் முடிவு செய்து டெல்லிக்கு செல்வோம். அப்போது மேகதாது திட்டத்துக்கு அனுமதி கொடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்துவோம்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story