காவிரிநீர் பங்கீடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்ற உத்தரவிட வேண்டும் - தமிழக அரசு கூடுதல் மனு


காவிரிநீர் பங்கீடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்ற உத்தரவிட வேண்டும் - தமிழக அரசு கூடுதல் மனு
x

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

காவிரிநீர் பங்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்ற பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் தேவைக்காக மட்டும்...

காவிரிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த இறுதி தீர்ப்பில், காவிரி படுகையில் இல்லாத பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக மட்டும் 4.75 டி.எம்.சி. நீரை பயன்படுத்திக்கொள்ளவும், குடிநீர் தேவையில்லாத நீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் காவிரியில் விடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் மீறிவருகிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை உறுதிசெய்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பின்பற்ற பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.

உத்தரவிட வேண்டும்

காவிரி ஆற்றுப்படுகை, அதன் கிளை ஆறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நுகர்வு தேவை போக மீதமுள்ள நீரை பெங்களூரு நகருக்கு மாற்றக்கூடாது என பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.

நுகர்வு தேவை போக மீதமுள்ள நீரை முறையாக சுத்திகரித்த பின்னரே, காவிரி ஆற்றில் விடுவதற்கு கர்நாடக அரசுக்கும், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும். பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காக காவிரி ஆறு, அதன் ஆற்றுப்படுகையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவை கண்காணிக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

நீரின் தரம், அளவு

காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீரின் தேவைக்கு எடுக்கப்பட்டு, நுகர்வு தேவை போக மீதமுள்ள நீரின் தரத்தையும், அளவையும் கண்காணிக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அந்த கூடுதல் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


Next Story