கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு குறைப்பு
நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது.
மைசூரு:
நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது.
கனமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன் மற்றும் வடகர்நாடக மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.
இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுடன், அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் கனமழையால் காவிரி படுகையில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கபினி
கேரள மாநிலம் வயநாட்டை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று 2,282.50 கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது மழை குறைந்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. மேலும் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ேக.ஆர்.எஸ்.
இதேபோல், காவிரியின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை நிலவரப்படி 110 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33,566 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ். அணை நிரம்ப இன்னும் 14 அடியே பாக்கி உள்ளது. தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது.
வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி
இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் காவிரியில் தமிழகம் நோக்கி செல்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 24,071 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று அது வினாடிக்கு 9,071 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.