நாங்கள் போராட தொடங்கினால் சி.டி.ரவி வெளியில் நடமாட முடியாது; காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் எச்சரிக்கை


நாங்கள் போராட தொடங்கினால் சி.டி.ரவி வெளியில் நடமாட முடியாது; காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:45 PM GMT)

நாங்கள் போராட தொடங்கினால் சி.டி.ரவி எம்.எல்.ஏ. வெளியில் நடமாட முடியாது என்று காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கூறுவதை ஏற்க முடியாது

கர்நாடகத்தில் 'சித்ராமுல்லாகான்' (சித்தராமையா) மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்துக்கள் கொல்லப்படுவார்கள் என்று பா.ஜனதாவை சேர்ந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவை 'சித்ராமுல்லாகான்' என்று கூறியது சரியல்ல. நாங்கள் போராட ஆரம்பித்தால் சி.டி.ரவி வெளியே நடமாட முடியாது.

அவர் அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். ஆனால் தரம் தாழ்ந்து கருத்து கூறுவதை ஏற்க முடியாது. சித்தராமேஸ்வரா என்ற இறைவன் பெயரில் இருந்து தான் சித்தராமையா என்ற பெயர் வந்தது. இந்த ஆட்சியில் ஊழல் நடக்கிறது என்று சொன்னால், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லையா? என்று பா.ஜனதா தலைவர்கள் கேட்கிறார்கள். இவ்வாறு கேட்பது அக்கட்சி தலைவர்களுக்கு நோய் போல் ஆகிவிட்டது.

ரவுடிகளுடன் கூட்டணி

ரவுடிகளை பா.ஜனதாவில் சேர்த்து கொண்டுள்ளனர். டிக்கெட் கொடுக்கும் விஷயத்தில் ரவுடிகளுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து கொண்டது போல் தெரிகிறது. எல்லா தவறையும் செய்துவிட்டு காங்கிரஸ் மீது சொல்வது பா.ஜனதாவின் வாடிக்கையாகிவிட்டது. பெலகாவி எல்லை பிரச்சினையில் கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து இருக்க வேண்டும். ஆனால் அந்த வேலையை அரசு செய்யவில்லை. ஜட், அக்கல்கோட்டை, சோலாப்பூரில் கன்னடர்கள் தான் அதிகம் வசிக்கிறார்கள். அந்த பகுதிகளை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.


Next Story