கார்களில் தவறவிடும் பொருட்களில் செல்போன் முதலிடம்- ஆய்வில் தகவல்


கார்களில் தவறவிடும் பொருட்களில் செல்போன் முதலிடம்- ஆய்வில் தகவல்
x

கோப்புப்படம் 

உபேர் நிறுவனம் நடத்திய ஆய்வில் கார்களில் மறந்துவிட்டு செல்லும் பொருட்களில் செல்போன் முதலிடத்தில் உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் வாடகை கார்களை ஆப் மூலம் புக் செய்து பலர் பயன்படுத்தி வருகிறார்கள். பயணம் செய்த பிறகு கார்களில் ஏதாவது பொருளை மறந்து தவறவிட்டு வரும் அனுபவம் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கார்களில் அதிகம் பேர் தவறவிட்ட பொருள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. உபேர் நிறுவனம் நடத்திய ஆய்வில் கார்களில் மறந்துவிட்டு செல்லும் பொருட்களில் செல்போன் முதலிடத்தில் உள்ளது. 2-வதாக கேமராவும், 3-வதாக லேப்-டாப்பும் உள்ளது. பேக், பணப்பை (பர்ஸ்), ஸ்பீக்கர், துணி, மளிகை பொருட்கள், பணம், தண்ணீர் பாட்டில், ஹெட்போன் ஆகியவை முறையே 4 முதல் 10 இடத்தில் உள்ளன.

அதேபோல் செல்போன் சார்ஜர், கிரிக்கெட் பேட், பிறந்தநாள் கேக், கல்லூரி சான்றிதழ், இனிப்பு அடங்கிய பெட்டி உள்ளிட்டவற்றையும் கார்களில் மறந்து விட்டு சென்றுள்ளனர். அதிகம் பேர் கார்களில் பொருட்களை மறந்து தவறவிடும் நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் டெல்லி, 3-வது இடத்தில் லக்னோ, 4-வது இடத்தில் கொல்கத்தா ஆகிய நகரங்கள் உள்ளன.

மதியம் 1 மணி முதல் 3 மணிவரை பயணிப்பவர்களே அதிகளவில் பொருட்களை மறந்துவிட்டு செல்கிறார்கள். சனிக்கிழமைகளில் துணிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் தண்ணீர் பாட்டில், திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஹெட்போன் அல்லது ஸ்பீக்கர்களை அதிகம் பேர் மறந்துவிட்டு சென்று உள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story