சபரிமலை அருகே பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி - பினராயி விஜயன் தகவல்


சபரிமலை அருகே பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி - பினராயி விஜயன் தகவல்
x

கோப்புப்படம்

பாதுகாப்பு தொடர்பான விண்ணப்பங்கள் மத்திய உள்துறையின் பரிசீலனையில் உள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கோட்டயம் மாவட்டம், எருமேலியை அடுத்த மணிமலா கிராமத்தில் மலைப்பகுதியில் பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கேரள சட்டசபையில் சபரிமலை அருகே விமான நிலையம் குறித்து உறுப்பினர் கே.யு.ஜெனிஷ் குமார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி பினராயி விஜயன், "சபரிமலையில் பசுமை விமான நிலையம் அமைய இருக்கும் இடத்திற்கான பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மேலும் பாதுகாப்பு தொடர்பான விண்ணப்பங்கள் மத்திய உள்துறையின் பரிசீலனையில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

மேலாண்மை மேம்பாட்டு மையத்தால் (சி.எம்.டி.) தயாரித்து அளிக்கப்படும் திட்ட மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையின்படி விமான நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படும்" என்று அவர் கூறினார்.


Next Story