ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை அமைப்பு கலைப்பு - மத்திய அரசு நடவடிக்கை


ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை அமைப்பு கலைப்பு - மத்திய அரசு நடவடிக்கை
x

கோப்புப்படம் 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சதி தொடர்பாக அமைக்கப்பட்டிருந்து ஒரு விசாரணை அமைப்பை மத்திய அரசு அதிரடியாக கலைத்துள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு, மே மாதம் 21-ந் தேதி தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலைக்கான விரிவான சதி பற்றி 'எம்.டி.எம்.ஏ.' என்னும் பல்துறை கண்காணிப்பு முகமை அமைக்கப்பட்டிருந்தது.

ராஜீவ் காந்தி கொலைச் சதி பற்றி விசாரிக்க அமைக்கப்பட்டிருந்த ஜெயின் கமிஷன் பரிந்துரையின்படி, 1998-ம் ஆண்டு 2 ஆண்டு பதவிக்காலத்துடன் இந்த முகமை அமைக்கப்பட்டது. பலமுறை அதன் ஆயுள்காலம் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் பெரிய அளவில் எந்த திருப்புமுனையையும் இந்த முகமை சாதிக்கவில்லை.

இந்த அமைப்பு மத்திய புலனாய்வு முகமை சி.பி.ஐ.யின் கீழ் செயல்பட்டது. இதில் பல்வேறு மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். டி.ஐ.ஜி. அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி தலைமை வகித்தார். இந்த வழக்கின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இலங்கை, இங்கிலாந்து, மலேசியா என பல நாடுகளுக்கு 24 கடிதங்களை அந்த முகமை எழுதியது. 20 கடிதங்களுக்கு பதில் வரப்பெற்றள்ளது.

இந்த நிலையில் பல்துறை கண்காணிப்பு முகமையை மத்திய அரசு கலைத்து இருக்கிறது. இதற்கான உத்தரவு கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் இப்போதுதான் வெளியாகி உள்ளது.

இந்த அமைப்பின் நிலுவையில் இருந்த விசாரணை, சி.பி.ஐ.யின் ஒரு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறும்போது, "இந்த முகமையின் விசாரணை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. எம்.டி.எம்.ஏ. வெளிநாடுகளுக்கு அனுப்பிய சில கடிதங்கள் நிலுவையில் உள்ளன. இனி இது தொடர்பான நடவடிக்கைகளை சி.பி.ஐ. கவனிக்கும்" என தெரிவித்தன.


Next Story