மர்ம நபர்கள் சங்கிலியை பறிக்க முயன்றதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்த பெண்


மர்ம நபர்கள் சங்கிலியை பறிக்க முயன்றதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்த பெண்
x

கணவருடன் மொபட்டில் சென்றபோது மர்ம நபர்கள் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றதால் கீழே விழுந்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். தற்போது அவர் பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹாசன்:

கணவருடன் மொபட்டில் சென்றபோது மர்ம நபர்கள் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றதால் கீழே விழுந்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். தற்போது அவர் பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவருடன் மொபட்டில் சென்றார்

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா ஜனதா ஹவுஸ் படாவனே பகுதியில் வசித்து வருபவர் ஹரீஷ். இவரது மனைவி ராதா பாய். நேற்று காலையில் ஹரீஷ், தனது மனைவியுடன் மொபட்டில் நுக்கேனஹள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார். மொபட்டை ஹரீஷ் ஓட்ட, ராதா பாய் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் பெலகீஹள்ளி கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 வாலிபர்கள், திடீரென ராதா பாயின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது ராதா பாய், தாலிச்சங்கிலியை பிடித்துக் கொண்டார்.

பலத்த காயம்

இதற்கிடையே நிலை தடுமாறிய ஹரீஷ் மொபட்டுடன் கீழே விழுந்தார். அவருடன் சேர்ந்து ராதாபாயும் விழுந்தார். இதனால் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்ததும் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதற்கிடையே கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த ராதா பாய், இரேசாவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

போலீஸ் வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரேசாவே போலீசாரும், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிப்பிரசாத்தும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story