சந்திரபாபு நாயுடுவை ராஜமகேந்திரவரம் மத்திய சிறைக்கு மாற்ற முடிவு..!! பலத்த போலீஸ் பாதுகாப்பு


சந்திரபாபு நாயுடுவை ராஜமகேந்திரவரம் மத்திய சிறைக்கு மாற்ற முடிவு..!! பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

சந்திரபாபு நாயுடு ராஜமகேந்திரவரம் மத்திய சிறைக்கு மாற்றப்படுவதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக மாநில குற்ற புலனாய்வு துறை (சி.ஐ.டி) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று அதிகாலை 6 மணியளவில் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர் இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து வரும் 22-ந்தேதி வரை ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை உறுதியானது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு ராஜமகேந்திரவரம் மத்திய சிறைக்கு மாற்றப்படுவதையொட்டி, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே சந்திரபாபு நாயுடு தனது 42வது திருமண நாளையொட்டி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது அவரின் ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story