சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - ஆந்திர சிறப்பு கோர்ட்டு உத்தரவு
சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து ஆந்திர சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது
திருப்பதி,
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். சந்திரபாபு நாயுடு ஜாமீன் கேட்டு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் பலமுறை மனு தாக்கல் செய்தார். சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திராவில் பைபர் நெட், அங்கல்லு கலவரம், இன்னர் ரிங் ரோடு ஊழல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த 3 வழக்குகளிலும் முன்ஜாமீன் வழங்க கோரி சந்திரபாபு நாயுடு ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இவரது மனுக்கள் மீது ஒரே நாளில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுக்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.