சந்திரனில் நாளை சூரிய உதயம்..! விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் விழித்தெழுமா?


சந்திரனில் நாளை சூரிய உதயம்..! விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் விழித்தெழுமா?
x

சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பாதுகாப்பாக இருந்தால் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைப்பது சாத்தியமாகும்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த மாதம் 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள், நகர்ந்து சென்று ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டது.

அடுத்த 14 நாட்கள் சூரிய ஒளி இல்லாததால் லேண்டர் மற்றும் ரோவருக்கான மின்சாரம் கிடைக்காது. எனவே, கடந்த 4ம் தேதி ரோவர் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டது. அதன் அருகில் விக்ரம் லேண்டரும் ஸ்லீப்பர் மோடில் வைக்கப்பட்டது.

முன்னதாக ChaSTE, RAMBHA-LP,ILSA கருவிகள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்துவிட்டன. அதன்பின்னர் அந்த கருவிகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. ரிசீவர்கள் மட்டும் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, சூரிய ஒளி வந்தபின்னர், லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22-ல் செயல்பட துவங்கும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விக்ரம் லேண்டர் மற்றும் அதில் உள்ள பிரக்யான் ரோவர் ஆகியவை 14 நாட்கள் (பூமி நாள்) ஆயுட்காலம் கொண்டவை. சந்திரனின் மேற்பரப்பில் ஒரு நாள் (சந்திர நாள்) என்பது பூமியில் சுமார் 28 நாட்களுக்கு சமம். அதாவது சந்திரனில் சுமார் 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவாக இருக்கும். ஆகஸ்ட் 23 அன்று, சந்திரனில் விடியத் தொடங்கியதால் லேண்டர் அன்றைய தினம் தரையிறக்கப்பட்டது. செப்டம்பர் 4 ஆம் தேதி நிலவில் பகல் முடிவடைந்ததால், லேண்டர் மற்றும் ரோவரை ஸ்லீப் மோடுக்கு இஸ்ரோ மாற்றியது.

லேண்டர் மற்றும் ரோவர் செயல்பட மின்சாரம் தேவை. சந்திரயான் லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள சோலார் பேனல்கள் சூரிய ஒளியால் இயங்குகின்றன. ஆனால் இரவு தொடங்கியதால் மின்சார உற்பத்தி செய்ய முடியாது.

அத்துடன், இரவில் நிலவின் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து கடும் குளிர் தொடங்கும். சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 253 டிகிரி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குறைந்த வெப்பநிலையில், ரோவர் மற்றும் லேண்டர் என இரண்டுமே உறைந்துவிடும். அடுத்து சூரிய ஒளி படும்போது ரோவர் மற்றும் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள். அந்த சவால் நிறைந்த பணியை நாளை செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது

சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பாதுகாப்பாக இருந்தால் இது சாத்தியமாகும். விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் இந்த கடுமையான வானிலையில் இருந்து தப்பித்து மீண்டும் இயங்கும் என்று இஸ்ரோ நம்பிக்கையில் இருக்கிறது. எனவே அனைவரின் கவனமும் சந்திரயான்-3 மீது உள்ளது.


Next Story