பெண் சக்திக்கு சந்திரயான் திட்டம் ஒரு வாழும் எடுத்துக்காட்டாக உள்ளது; பிரதமர் மோடி பேச்சு
டெல்லியில் வரும் செப்டம்பரில் ஜி-20 தலைவர்களுக்கான உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அப்போது இந்தியாவின் ஆற்றல் தெரிய வரும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. அதன் 100வது அத்தியாயம், நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி நடந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் 104-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில் அவர் பேசும்போது, சந்திரயான்-3 விண்கல வெற்றியானது பல வகையான கொண்டாட்டங்களை சேர்த்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கி 3 நாட்களுக்கும் மேலாகி விட்டன. இந்த வெற்றி மிக பெரியது. அதுபற்றி எவ்வளவு பேசினாலும் மிகையாகாது.
புதிய இந்தியாவானது, அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றி பெற விரும்புவதுடன், எந்தவொரு சூழலிலும் எப்படி வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிந்து வைத்துள்ளது. அந்த புதிய இந்தியாவின் மனவலிமைக்கு எடுத்துக்காட்டாக இந்த சந்திரயான்-3 விண்கல திட்டம் அமைந்துள்ளது. நண்பர்களே. நாம் அதிக உயரத்திற்கு சென்றிருக்கிறோம் என்று அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், டெல்லி செங்கோட்டையில் நான் பேசும்போது, ஒரு தேசிய பண்பாக, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நாம் வலிமைப்படுத்த வேண்டும் என்று கூறினேன். பெண் சக்தியின் திறமையானது சேரும்போது, முடியாததும் சாத்தியப்படும்.
பெண் சக்திக்கு சந்திரயான் திட்டமும் ஒரு வாழும் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் நேரடியாக தொடர்புடையவர்களாக இருந்தனர்.
இதனை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உத்தரகாண்டின் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி ஆகியோர் அரித்துவார் நகரில் ஒன்றாக அமர்ந்து நிகழ்ச்சியை கேட்டனர். அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் கவுகாத்தி நகரில் நிகழ்ச்சியை கவனித்து கேட்டார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவின் ஆற்றல் வருகிற செப்டம்பரில் தெரிய வரும். ஜி-20 தலைவர்களுக்கான உச்சி மாநாட்டுக்கு இந்தியா முழு அளவில் தயாராகி வருகிறது.
40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு வருகை தர உள்ளனர். ஜி-20 உச்சி மாநாட்டின் வரலாற்றில் பெரிய அளவிலான பங்கேற்பாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.