டெல்லி: பல்கலைக்கழகங்களில் தடையை மீறி மோடி ஆவணப்படம் திரையிட முயற்சி


டெல்லி: பல்கலைக்கழகங்களில் தடையை மீறி மோடி ஆவணப்படம் திரையிட முயற்சி
x
தினத்தந்தி 28 Jan 2023 1:01 AM IST (Updated: 28 Jan 2023 1:04 AM IST)
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லியில் பல்கலைக்கழகங்களில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் திரையிட முயற்சி நடைபெற்றது.

டெல்லி,

2002 குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானார்.

இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது.

ஆனால், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி பல்கலைக்கழகம், அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் நேற்று தடையை மீறி மோடி குறித்த ஆவணப்படம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதால் மாணவர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story