பசுமாட்டை அடித்து கொன்ற புலி


பசுமாட்டை அடித்து கொன்ற புலி
x

உன்சூரில் பசுமாட்டை அடித்து கொன்ற புலியால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

உன்சூர்:

உன்சூரில் பசுமாட்டை அடித்து கொன்ற புலியால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

புலி கடித்து குதறியது

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பி.ஆர்.காவல் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். ரவிக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்த தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. பசுமாடுகளை அவரது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் பசுமாடுகளை மேய்ச்சலுக்காக ரவி விட்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து இரைதேடி வெளியே வந்த புலி ரவியின் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாட்டை புலி கடித்து குதறியது. மேலும் மாட்டின் பாதி உடலை தின்று மீதி உடலை எடுத்து கொண்டு புலி வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து ரவி தோட்டத்திற்கு வந்தார்.

அடித்து கொன்றது

அப்போது பசுமாடு செத்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரவி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். விசாரணையில், பசுமாட்டை புலி அடித்து கொன்றது தெரியவந்தது.

அப்போது, கிராமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக புலி ஒன்று பி.ஆர்.காவல் கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மாட்டை அடித்து கொன்றது. தற்போது மற்றொரு பசுமாட்டை கொன்றுள்ளது.

கிராமமக்கள் பீதி

இதனால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளோம். வேலைக்கு கூட செல்ல முடியவில்லை. அட்டகாசம் செய்து வரும் புலியால் வீட்டிற்குள்ளேயே நாங்கள் முடங்கி உள்ளோம்.

எனவே மாட்டின் உரிமையாருக்கு அரசு சார்பில் நிவராண நிதி வழங்க வேண்டும். மேலும் புலியை பிடிக்க கிராமத்தில் இரும்பு கூண்டு வைக்க வேண்டும் என்றனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் புலியை பிடிக்க இரும்பு கூண்டு கை்கப்படும் எனவும், மாட்டின் உரிமையாளருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.


Next Story