நமீபியாவில் இருந்து இந்தியா வரும் சிறுத்தைகள்... பயணத்தின் போது உணவு கிடையாது- என்ன காரணம் ?


நமீபியாவில் இருந்து இந்தியா வரும் சிறுத்தைகள்... பயணத்தின் போது உணவு கிடையாது- என்ன காரணம் ?
x

Image Courtesy: AFP 

நமீபியாவில் இருந்து வரும் முழு பயணத்தின் போதும் சிறுத்தைகளுக்கு இடையில் உணவு வழங்கப்படாது.

சென்னை,

இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது. 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானம் மூலம் நமீபியாவில் இருந்து வருகிற 17-ந்தேதி காலை ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்படும்.

பின்னர் அங்கு இருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி செப்டம்பர் 17-ல் அவரது பிறந்த நாள் அன்று பூங்காவில் விடுவிப்பார்.

இந்த நிலையில் விமான பயணத்தின் போது சிறுத்தைகள் கழிக்கும் நேரங்களில் வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என்று வனத்துறையின் மூத்த அதிகாரி சவுகான் தெரிவித்துள்ளார். இதனால் இந்த முழு பயணத்தின் போதும் நமீபியாவில் இருந்து வரும் சிறுத்தைகளுக்கு இடையில் உணவு வழங்கப்படாது.

நமீபியாவில் இருந்து புறப்பட்ட பிறகு, இந்த சிறுத்தைகளுக்கு உணவு குனோ-பால்பூர் தேசிய பூங்காவில் தான் வழங்கப்படும். நீண்ட பயணம் விலங்குகளுக்கு குமட்டல் போன்ற உணர்வுகளை உருவாக்கி மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இதுபோன்ற முன்னெச்சரிக்கை தேவை, என வனத்துறை அதிகாரி சவுகான் தெரிவித்துள்ளார்.


Next Story