இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு நண்பருடன் சேர்ந்து மனைவியை பலாத்காரம் செய்த தொழில் அதிபர் கைது..!
கேரளாவில் இரும்பு சங்கிலியால் மனைவியை கட்டிப்போட்டு, நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சம்பவத்தன்று இரவு 35 வயது இளம் பெண்ணை சிலர் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவர் ரத்தக்காயங்களுடன் மிகவும் சோர்வாக இருந்தார். அந்த பெண்ணை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவரின் மர்ம உறுப்பு உள்ளிட்ட பல இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த இளம்பெண்ணை கணவரே, நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தெரியவந்தது.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்ணின் கணவர் சென்னையில் தொழில் அதிபராக உள்ளார். இவர் விபரீத ஆசையால் மனைவியை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் தன் மனைவியை அவர் ஆபாசமாக செல்போனில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியே கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், அவருடைய கணவருக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளம்பெண்ணை கணவர் தனது நண்பருடன் சேர்ந்து கடுமையாக தாக்கி உள்ளார். மேலும் அவர்கள் இருவரும் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் பீர் பாட்டிலாலும் காயப்படுத்தி உள்ளனர்.
இதனால் உடல்நலம்பாதிக்கப்பட்ட இளம்பெண் வீட்டில் கதறி அழுதார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அந்த சமயத்தில் தான் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் தனக்கு நடந்த கொடுமையை அந்த பெண் அழுது கொண்டே போலீசாரிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் தொழில் அதிபரையும், அவருடைய நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தொழில் அதிபர் மீது மனைவியை இயற்கைக்கு மாறாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடைய நண்பர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் திருச்சூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.