சென்னை வானிலை மையம் அதி நவீனமானது: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை வழங்கியது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தென் மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. காயல்பட்டினத்தில் மட்டும் 94 செ.மீட்டர் மழை பெய்து மிரட்டியது. தென் மாவட்டங்களை புரட்டி போட்ட இந்த மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் இன்னமும் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை. தென் மாவட்டங்களில் மழை முன்னறிவிப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் சரியான கணிப்பை வெளியிடவில்லை என்று தமிழக அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நிர்மலா சீதாராமன் கூறுகையில், " சென்னை வானிலை மையம் அதி நவீனமானது. முன்னெச்சரிக்கை சரியாக கிடைக்கவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் கனமழை குறித்த அப்டேட்டை வானிலை ஆய்வு மையம் கொடுத்தது" என்று கூறியுள்ளார்.