சத்தீஷ்காரில் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை- 5 பேர் கைது
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு போன் செய்தது போலீசாரை திசை திருப்புவதற்காக செய்த காரியம் என்று போலீசாரிடம் சோனு ஒப்புக்கொண்டார்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி இளம்பெண் ஒருவர் காணாமல் போனார். கோர்பா நகருக்குச் சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை, கோர்பா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள், காணாமல் போன பெண்ணின் தந்தையை போன் மூலம் தொடர்புகொண்டு பேசி உள்ளனர். அப்போது, அந்த பெண்ணை கடத்தி வைத்திருப்பதாக கூறி, 15 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதைப்பற்றி பெண்ணின் தந்தை போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மர்மநபர்கள் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயன்றனர். பின்பு பாலி, போடி, ரத்தன்பூர் மற்றும் சக்ரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து அந்த இடத்திற்கு சென்ற போலீசார் குற்றவாளிகள் 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில் முக்கிய குற்றவாளியான சோனு லால் சாஹு (வயது 27) என்பவர் அந்த பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் தனது நண்பர்களான சந்தீப் போய் (21), வீரேந்திர போய் (19), சுரேந்திர போய் (21), ஜீவா ராவ் (19) ஆகியோரின் உதவியுடன் கெரஜாரியா காட்டில் உடலை புதைத்ததாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு போன் செய்தது போலீசாரை திசை திருப்புவதற்காக செய்த செயல் என்று சோனு கூறினார்.
இதைத் தொடர்ந்து கெரஜாரியா காட்டுப்பகுதிக்கு போலீசார் சென்றனர். அங்கு குற்றவாளிகள் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டி பெண்ணின் உடலை மீட்டனர். மேலும் குற்றவாளிகள் 5 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.